உலக நாடுகளின் அமைப்பு, ஆண்டு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தினங்களில், “உலக அமைதி தினம்”, “உலக பழங்குடியினர் தினம்”, “உலக மகளிர் தினம்”, “உலக நீர் தினம்”, “உலக ஆரோக்கிய தினம்”, “உலக அன்னையர் தினம்”, “உலக ஆசிரியர் தினம்” போன்ற பல உலக தினங்களை அனுசரிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவற்றின் மகத்துவத்தைக் குறித்து உலக மாந்தரின் கவனத்தை ஈர்ப்பதுதான் இவற்றை அனுசரிப்பதின் அடிப்படை நோக்கமாக உள்ளது. இது அந்த ஒரு நாளில் அனுசரிப்பதின் எல்லைக்கு உட்படுத்தப்பட்டால் அதனால் பயன் எதுவும் இல்லை. சென்ற வாரம் ஜூன் 21 அன்று அனுசரிக்கப்பட்ட “உலக யோகா தினம்” ஆண்டிற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் தினம் அன்று. உடல் நலம், மனநலம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்காக நாள்தோறும் அனுசரிக்கத்தக்க வாழ்வியல் முறையாகும். யோகம் எனின் உடற்பயிற்சி அன்று(Physical Exercise)உடல் மற்றும் மனத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்து உடல் நலத்துடன் வாழுமாறு செய்யும் சாதனை வழியாகும்.
யோகத்தின் பெயரைக் கேட்டாலே அயல் நாட்டினர் மந்திர வயப்பட்டு கண்களை மூடி “யோக நித்திரை”யில் ஆழ்ந்து விடுகின்றனர். 1970களில் அயல்நாடுகளில் பாரதத்திலிருந்து வரும் யோகிகளுக்குச் சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டது. மகரிஷி மகேஷ்யோகி அப்பொழுது மிகவும் புகழ்பெற்று விளங்கினார். அவருடைய Transcendental Meditation (T.M) அயல்நாட்டினரை மிகவும் ஈர்த்தது. யோகத்தின் பெயரிலுள்ள பொருட்களுக்கு கடைகளில் நல்ல வரவேற்பு இருந்தது. அப்பொழுது வியன்னா பல்கலைக்கழகத்தில் நாம் பயின்று கொண்டு இருந்தோம். (1977 -79) அருகிலிருந்த ஒரு புத்தக கடைக்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழையும் பொழுதே Neue Erscheinungen என்னும் பலகையின் அடியில் புதிதாக ஜெர்மன் மொழியில் வெளிவந்திருந்த பல நூல்கள் இருந்தன. அவற்றில் “Yoga-Kochbuch” (யோக சமையல் நூல்) என்னும் தலைப்புடன் கூடிய நூல் நம் கண்ணில் தென்பட்டது. உற்சாகத்துடன் கையில் எடுத்துப் பார்த்தபொழுது, உடல், மன வளத்துடன் நல்ல உறுதியான உடலுடன், உடல் நலத்துடன் திகழ பல யோக உணவுகளைக் கொடுத்திருப்பதாக நூலின் மேல் அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நூலின் உள்ளே பக்கங்களைப் புரட்டிய பொழுது அங்கு நாம் இட்லி, தோசை, வடை, சாம்பார் போன்ற பாரத நாட்டின் சைவ உணவு சார்ந்த சிறந்த உணவு வகைகளைச் சுவையாகச் செய்யும் முறை எப்படி? என்னும் விவரங்களைக் கண்டோம். நூலை வாங்குவதற்கு அப்பொழுது நம்மிடம் போதுமான அளவிற்கு பணம் இருக்கவில்லை. மறுநாள் பணத்துடன் வாங்குவதற்குச் சென்ற பொழுது அந்நூலின் அனைத்துப் பிரதிகளும் அப்பொழுதே விற்பனையாகி இருந்தன!
யோகம் என்னும் சொல் “யுஜ்” என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோற்றம் கொண்டுள்ளது. வடமொழி இலக்கண சாத்திரத்தின் மூன்று முனிவர்களில் முதன்மையானவராகத் திகழும் மகரிஷி பாணினி அவருடைய “தாதுபாட”த்தில் மூன்று இடங்களில் மூன்று பொருட்களை அளித்துள்ளார். நான்காவதாக வரும் “திவாதிகண”த்தில் வரும் இந்த வேர்ச்சொல்லின் பொருள் “யுஜ் சமாதௌ” என்பதாகும். அதாவது மனத்தை நிலையாக உறுதியுடன் விளங்கச் செய்தல், ஒருமுனைப்பாட்டை அடையச் செய்வது ஆகும். ஏழாவதாக வரும் “ருதாதிகண”த்தில் வரும் இந்த வேர்ச்சொல்லின் பொருள் “யுஜ் யோகே” என்பதாகும். அதாவது இணைப்பது, சேர்ப்பது ஆகும். பத்தாவதாக வரும் “சுராதிகண”த்தில் வரும் இந்த வேர்ச்சொல்லின் பொருள் “யுஜ் ஸம்யமனே” என்பதாகும். அதாவது கட்டுப்படுத்துவது ஆகும்.
யோகம் பண்டைய பாரத தரிசன சாத்திரங்களில் ஒரு சாத்திரத்தின் பெயருமாக உள்ளது. இவற்றை ஆறு தரிசனங்கள் என்று அழைக்கின்றனர். (Six Schools of Indian Philosophy) 1. சாங்கியம், 2. யோகம், 3. நியாயம், 4. வைசீஷிகம், 5. பூர்வ மீமாம்சை, 6. உத்தர மீமாம்சை ஆகும். நடைமுறையில் மததர்மங்களாக உள்ள அத்வைதம், துவைதம், விசிஷ்டாதுவைதம், சக்தி விசிஷ்டாதுவைதம் என்னும் இவை போன்றவை ஆறாம் தரிசன சாத்திரமான உத்தர மீமாம்சையின் உட்பிரிவுகளாகும். யோகம் பாரத நாட்டின் தரிசன சாத்திரமாக விளங்கினாலும் சாதி, மத பிரிவுகளின் வேறுபாடின்றி, தர்மம் சார்ந்த விதிமுறைகள், சடங்குகளின் எல்லை வரையறையன்றி உலகிலுள்ள அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் அனுசரிக்கத் தக்க, உலக மாந்தருக்கு நன்மையை அளிக்கவல்ல வாழ்வியல் முறையாக உள்ளது.
யோகாசனங்கள் உலகிலே எவ்வளவு பிராணிகள் உள்ளனவோ, அவ்வளவு உள்ளன எனக்கூறுகின்றனர். யோகம் எனின் வெறும் ஆசனங்களைச் செய்வது அல்ல. யோகாசனங்களைச் செய்வதாலேயே யோகமானது முழுமையை அடைவதும் இல்லை. அஷ்டாங்க யோகத்தில் “ஆசனம்” என்பது மூன்றாம் படியாகும். 1. இயமம், 2. நியமம், 3. ஆசனம், 4. பிராணாயாமம், 5. பிரத்தியாஹாரம், 6. தாரணம், 7. தியானம், 8. சமாதி. இந்த அஷ்டாங்க யோகத்தின் முதல் நான்கு படிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்னும் இவை உடல் சார்ந்த வெளிப்படையான சாதனங்கள் ஆகும். இறுதி நான்கு படிகளான பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் இவை மனம் சார்ந்த, அகம் சார்ந்த சாதனங்கள் ஆகும். இயமம் என்னும் முதல் படியானது அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (கள்ளாமை) பிரம்மச்சரியம், அபரிக்ரஹம் (தானத்தை ஏற்காமல் இருப்பது) என்னும் நீதி, நியாயம் ஒழுக்க நெறி சார்ந்தவற்றை வலியுறுத்துகிறது. நியமம் என்னும் இரண்டாவது படியானது சௌசம் (தூய்மை) சந்தோஷம், தவம், சுவாத்யாயம் (தன்னையறிதல்) ஈசுவரபிரணிதானம் (இறைபக்தி) என்னும் புறத்தூய்மையை வலியுறுத்துகிறது. புறத்தூய்மை, அகத்தூய்மைக்கு அடிப்படையாக உள்ளது.
“இதுவே அகத்தூய்மை, இதுவே புறத்தூய்மை
இதுவே நம் கூடல சங்கனை விரும்பும் வழி”
என பசவண்ணல் கூறியுள்ளார். சாதகன் புறத்தூய்மையுடன் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனின்
“கள்ளுப்பானையைப் புறத்திலே தூய்மை செய்வது
அனையதாம் கூடல சங்கம தேவனே” என உவமித்தும் உள்ளார்.
வாழ்க்கையிலே நிம்மதியுடன் வாழ வேண்டும் எனின் மனத்தைக் கட்டுப்பாட்டிலே (Control) வைப்பது மிகவும் தேவையானதாகும். கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் அவருடைய யோக சூத்தித்தின் தொடக்கத்தில் “யோக சித்த வ்ருத்தி நிரோத” (சூத்திரம் 2) என்று சூத்திர வடிவில் கூறியுள்ளார். அதாவது மனத்திலே ஏற்படும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துத்துதே யோகம் என்பது இதன் பொருளாகும். மனிதனின் மனமானது ஒரு குளத்திலுள்ள நீரைப் போன்றதாகும். குளத்திலே கல்லை வீசினால் நீரில் அலைகள் தோன்றும். குளத்தின் தளத்தைக் காணவியலாது. அதைப்போன்றே வாழ்க்கையில் பல கசப்பான நிகழ்வுகள் மனத்தைத் துன்புறுத்துகின்றன. அப்பொழுது மனத்திலே எழும் எண்ண அலைகள் மன அமைதியைக் குலைக்கின்றன. நீரின் அலைகள் அடங்கினாலன்றி அதன் தளத்தைக் காணவியலாது. நீர் மாசுற்று இருப்பினும் தளமானது தென்படுவதில்லை. அதைப் போன்றே மாசு நிறைந்துள்ள மனத்திலே அலைந்தாடும் கெட்ட எண்ணங்களைக் கட்டுப்படுத்தினாலன்றி பொருளின் நிலையைக் குறித்த அறிவானது ஏற்படுவதில்லை. அதனை எப்படி அடைவது? “அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத (சூத்திரம் 12) அதாவது இடைவிடாத பயிற்சி மற்றும் பற்றற்ற தன்மை சார்ந்த எண்ணங்களால் மனத்தை அடக்கவியலும் என பதஞ்சலி முனிவர் விவரித்துள்ளார்.
பற்றற்ற நிலையின் உச்ச நிலையிலிருந்த மகாதேவியக்கா, மனிதனின் புலன்களைப் பாம்பின் நச்சுப் பற்களுக்கு உவமித்து உள்ளார். பாம்பு நச்சுப் பிராணி என்பது உண்மை. ஆனால் அதனுடைய பற்களில் நஞ்சு உள்ளது. அந்த நச்சுப் பற்களை அகற்றி, அச்சமற்று பாம்பை ஆட்டுவிக்கும் பாம்பாட்டியைப் போல புலன்களின் புலனின்பங்களை அனுபவிக்கும் ஆசை என்னும் நச்சுப் பற்களை அகற்றினால் இவ்வுடலானது பிறவிப்பிணைப்பிற்கு ஆட்படாது முன்னேறுவதற்கு வழி வகுக்கிறது என அவர் விவரித்து உள்ளார்.
“பாம்பின் வாயின் பல்லைக் களைந்து பாம்பை
ஆடச்செய்யவியலின் பாம்பின் தொடர்பே
நன்மையாம் கண்டாய் ஐயனே”
எனக் கூறியுள்ளார்.
இதே போன்று பசவண்ணலும் மனிதனின் மனத்தை பாம்பிற்கும் உடலை பாம்பு உள்ள கூடைக்கும் ஒப்பிட்டு உள்ளார். பாம்பாட்டி தன் மகுடியின் ஒலியால் கூடையிலுள்ள பாம்பை எவ்வாறு கைவசப்படுத்திக் கொள்கிறானோ, அதைப்போன்றே பூசை, தவம், ஜபங்களால் உடலினுள்ளே உள்ள மனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வியலும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“மனமே பாம்பு, உடலே கூடை
எப்பொழுது உண்ணும் என அறியேன்
கொல்லும் என அறியேன் நாள்தோறும்
உம்மை பூசிக்கவியலின் அதே
பாம்பு மந்திர வித்தையாம் கூடல சங்கம தேவனே”
ஸ்ரீ தரளபாளு ஜகத்குரு
டாக்டர். சிவமூர்த்தி சிவாசார்ய மஹாசுவாமிகள்
ஸிரிகெரெ
விஜய கர்நாடக
வெயில் நிலவொளி 29.06.2023
தமிழாக்கம்
திருமதி. கல்யாணி வெங்கடராமன்¬¬¬