
நீதி மன்றங்களின் வரலாற்றில் என்றுமே கண்டு கேட்டு அறியாத ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி. நீதிபதி ஒருவர் ஒரு கொலை வழக்கை விசாரித்துக் கொண்டு இருந்தார். குற்றம் சுமத்தப்பட்டவன் கொலையைச் செய்தான் என்று சாட்சி ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டு விட்டது. கொலை புரிந்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் நீதிபதி இதனைச் சரி என்று ஏற்கவில்லை.
“God created this man who am I to decree his death”
(இறைவன் இம்மனிதனைப் படைத்துள்ளார். இவனைக் கொள்வதற்கு நான் யார்) என்று நீதிமன்றத்தில் கூறி தலையில் அணிந்திருந்த wig
ஐக் களைந்து மேஜையின் மீது வைத்து விட்டு நியாய பீடத்திலிருந்து எழுந்து வெளியேறினார். நல்ல உயரமான உடலமைப்பைப் பெற்றிருந்த அவர் கம்பீரமாக வெளியேறியதைக் கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும் மிக்க வியப்படைந்தனர். அதன் பிறகு அவர் மீண்டும் நீதி மன்றத்திற்கு வரவில்லை. பாரத சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவராக இருந்த அவர் நீதிபதியின் அரியணையைத் துறந்து துறவியானார். பெங்களூருவில் உள்ள உயர்நீதி மன்றத்தில் இந்நிகழ்ச்சியானது நடைபெற்றது. ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சியானது உண்மையோ கற்பனைக்கதையோ என உறுதி செய்ய இயலவில்லை. நாம் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவிற்கு இரு மாதங்களுக்கு முன்பு சென்ற பொழுது இதனைக் குறித்து அறியவியன்றது.
“The more you travel outside India, the more you understand your own India” (பாரதத்தை விட்டு வெளியே எந்த அளவிற்குச் செல்கிறோமோ? அந்த அளவிற்கு இந்தியாவின் பெருமை சிறப்பை அதிகமாக அறியவியலுகிறது) என்று இதே பகுதியில் இதற்கு முன்பு எழுதியிருந்த விஷயத்திற்கு இது ஒரு சான்றாகத் திகழ்கிறது.
ஹவாய் (Hawai) அமெரிக்காவிலுள்ள ஐம்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது பசிபிக் மஹாசமுத்திரத்தில் உள்ள எட்டு முக்கியமான தீவுகளின் தொகுதியாகும். இவற்றுள் ஒன்றான கவாய் (Kawai) எனும் தீவிலே கண்களை ஈர்க்கவல்ல இயற்கை எழில் நிறைந்த சுமார் நானூறு ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ் சைவ சித்தாந்த சம்பிரதாயத்தைச் சார்ந்த ஹிந்து ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு அனைத்து உலகியல் பிணைப்பிக்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகச்சாதனையில் ஈடுபட்டுள்ள பல உயரமான உடலமைப்பைப் பெற்றுள்ள வயதான அமெரிக்காவைச் சார்ந்த துறவிகள் உள்ளனர். ஆசிரமத்தில் தியானம் செய்வது மட்டுமின்றி காட்டிலே மரம் செடிகளை வளர்க்கும் உடல் சார்ந்த உழைப்பையும் மேற்கொண்டுள்ளனர். யாருடைய உதவியும் இன்றி எத்தகைய செருக்கும் இன்றி, முறைப்படி தாங்களே சமைத்து அனைவரும் சேர்ந்து பிரசாதமாக உண்டு, எளிமையுடன் வாழ்கின்றனர். ஜடாதாரிகளாகவும், துவராடை அணிந்தவர்களாகவும், சிவனை ஆராதிப்பவர்களாகவும் உள்ள இவர்களின் கழுத்திலுள்ள உருத்திராக்க மாலை நெற்றியில் மூன்று பட்டைகளாக ஒளிரும் திருநீறு, புருவநடுவிலுள்ள குங்குமம் என்னும் இவற்றைக் காணும் பொழுது புராண காலத்தில் காடுமேடுகளில் இருந்த பாரத நாட்டின் ரிஷி முனிவர்களே இங்கு புலம் பெயர்ந்து வந்த நிலைத்து விட்டதைப் போலத் தோன்றுகிறது. இவர்களுக்கு உள்ள நவீன தொழில் நுட்ப அறிவு அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ள பாரத நாட்டைச் சார்ந்த மென்பொருள் பொறியாளர்களைவிடக் குறைந்தது இல்லை.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் இவர்களுடைய ஆசிரமத்திற்குச் சென்றிருந்த பொழுது Hinduism today என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த துறவியுமான பரமாச்சாரிய சதாசிவநாத ஸ்வாமிகள் நம்மை மிகவும் கௌரவத்துடன் வரவேற்றார். மின்சார வண்டியில் அமர்ந்து கொண்டு அவரே வண்டியைச் செலுத்தியவாறு ஆசிரமத்தைச் சுற்றியிருந்த அடர்ந்த காட்டிற்கு நம்மை அழைத்துச் சென்றார். தாமே அன்புடன் நீர் இறைத்து வளர்த்த தோட்டத்தில் விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்திருந்த பலவகையான மரம் செடிகளைக் காட்டியவாறு சில குறிப்புக்களையும் கூறினார். பெரிய பெரிய உருத்திராக்க மரங்கள், அவற்றின் அடிப்பகுதியில் ஏராளமாக விழுந்திருந்த நீல வண்ணத்தில் இருந்த உருத்திராக்கப் பழங்களை நாம் இங்கு தான் கண்டோம். அவற்றின் நடுவிலே தமிழ் சைவ மரபில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்று புகழ் பெற்ற திருமூலர் போன்ற பல இறைஞானம் எய்தியவர்களின், ரிஷி முனிவர்களின் கற்சிலைகள் ஒளிர்ந்து கொண்டிருந்தனர். அந்த வரிசைகளில் “குத்வைத்” சுவாமி அவர்களின் சிலையின் மீது நம் பார்வை நிலைத்தது. இவர்தான் மரணதண்டனையை விதிப்பதற்கு மறுத்து, துறவியான பெங்களூருவில் இருந்த உயர்நீதி மன்றத்தின் இளைஞரான நீதிபதி மகான் ஆவார். இவர் முன்பு விசாரணைக்கு வந்த கொலை வழக்கானது வாழ்வு&மரணத்தைக் குறித்த ஆழமான சிந்தனைக்குத் தூண்டு கோலாக அமைந்துள்ளது. அதன்பிறகு இவர் கால்நடையாக கிராமம் கிராமமாகச் சென்று, ஆன்மீக வழியில் முன்னேறி ஸ்ரீலங்காவிலுள்ள யாழ்ப்பாணத்தில் நிலையாகத் தங்கினார். அங்கிருந்த தமிழ்ச் சைவர்கள் ஆராதிக்கும் போற்றும் குருவாகத் திகழ்ந்தார். 1891ஆம் ஆண்டு அக்டோபர் 13ல் சமாதி நிலை எய்தினார்.
இவர் நீதிபதியாகத் திகழ்ந்த பொழுது திட்டமிட்டுக் கொலை செய்தவனுக்கு மரண தண்டனையை வழங்காமல் வெளியேறியது தவறாகாதா? கடமையிலிருந்து தவறியது ஆகாதா? உண்மைதான். உயிரைப் பறிப்பது எல்லா நேரங்களிலும் கொலையாவது இல்லை. போர்க்களத்தில் போராடி எதிரியைக் கொன்றால் வீர புருஷன் என்று அழைக்கப்படுகிறான். எதிர்பாராமல் வழியில் தன் மனைவி சகோதரியைச் சூழ்ந்து கொண்டு சீண்டி சினமடையச் செய்து முற்றுகையிட்டவன் இறக்க நேரிட்டால் கொலைகாரன் ஆவதும் இல்லை. விவகாரத்தில் பங்கு ஏற்று சமயம் பார்த்து தனக்கு ஆகாதவனின் உயிரைப் பறிப்பவன் கொலைகாரன் ஆகிறான். இதனைச் சட்டம் சார்ந்த மொழியில் Criminal Conspiracy motive என்று கூறுகின்றனர். அத்தகைய கொலைகாரர்களைச் சமூக நலனைக்கருத்தில் கொண்டு தண்டிப்பது நியாயமானச் செயலாகும். மரண தண்டனை விதிப்பது என்பது பழங்காலத்தல் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால் இதனைக் குறித்து பாரதநாட்டில் உள்ள தர்ம சாத்திரங்களில் ஒருமித்த கருத்தானது இல்லை.
“மஹத்ஸ்வப்யபராதேஷு தண்டம் ப்ராணாம் திகம் த்யஜேத்|
ருதே ராஜ்யபஹாராத்து யுக்ததண்ட ப்ரசஸ்யதே ||
நாட்டினுடைய பாதுகாவலுக்குக் கேட்டினை ஏற்படுத்தும் தேசத் துரோகிகளுக்கு மட்டும் மரண தண்டனையை விதிக்க வேண்டும். ஏனையோர் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்திருந்தாலும் மரண தண்டனை விதிக்காது தக்க முறையில் தண்டிக்க வேண்டும் என்று சில தர்ம சாத்திரங்கள் தீர்மானித்து உள்ளன. மகாபாரத்தில் சாந்தி பர்வத்தில் அரசனான த்யுமத்ஸேனன் “தண்டனையால் குற்றங்களைக் குறைப்பது சாத்தியமன்று. சிலர் மரண தண்டனைக்கு அஞ்சுவதும் இல்லை. குற்றங்களைச் செய்து கொண்டே இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு மரண தண்டனையை விதிக்க வேண்டும்” என்று கூற, இளவரசனான சத்யவத், “அவ்விதம் செய்தால் மரண தண்டனைக்கு ஆட்பட்டவனின் தந்தை&தாய், மனைவி மற்றும் குழந்தைகள் உயிரையும் மாய்த்துக் கொள்ளக் கூடும். இது சரியன்று” என வாதிடுகிறான். கற்காலத்தில் தீர்ப்பை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் மரண தண்டனை என்ன? வேறு எந்த தண்டனையைச் சார்ந்த அச்சமே எவருக்கும் இல்லை. நீதிமன்றம் விசாரணையை நடத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையை அளிப்பதற்குள் அவர்கள் இவ்வுலகத்திலேயே இருக்க மாட்டார்கள்! பாவச்செயல் புரிந்தும், எல்லா இன்பங்களையும் அனுபவிக்கும் இவர்களுக்குக் கடவுளே தக்க தண்டனையை அளிப்பான் என்பது பாரதீயரின் நம்பிக்கையாகும்.
“செய்தாரை அண்டிய பாவம்
அதைச் சொல்வோரையும் தான் மேவும்” என்னும் பழமொழியை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். ஆனால் யாரோ செய்த பாவத்திற்கு வேறு ஒருவர் ஏன் குறியாக வேண்டும்? என்னும் கேள்வி எழுவது இயல்பானதுதான். இதன் பொருளை விவரிக்கும் சிந்திக்கத்தக்க ஒரு புராணக்கதை உள்ளது.
தர்மத்வஜன் என்னும் ஒரு அரசன் இருந்தான். ஒருமுறை அவனுடைய நாட்டிலே கொடிய பஞ்சம் ஏற்பட்டது. வேத பாராயணம் செய்து அன்னதானம் செய்தால் பஞ்சம் அகலும் என ஜோதிடர்கள் கூறினர். மக்கள் மீது அன்பும் இரக்கமும் கொண்டிருந்த அரசன் அதற்கு ஏற்பாடு செய்தான். வேதபாராயணம் நிறைவுற்று, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஏதோ பாத்திரத்தில் விஷம் விழுந்து பலர் மாண்டனர். சிலர் தீவிரமாக பாதிக்கப்பட்டனர். தர்மத்தை அனுசரிக்கும் அரசனுக்கு மிகவும் துயரம் ஏற்பட்டது. உணவில் விஷம் எப்படி வந்தது என எவ்வளவு தணிக்கை செய்தும் தெரியவரவில்லை. மிகவும் பட்சாதாபம் அடைந்து, பிராயச்சித்த விதிமுறைகளை மேற்கொண்டான். இருப்பினும் அவனுடைய மனத்திலே பாவம் என்னும் எண்ணமானது வாட்டிக் கொண்டிருந்தது. உண்மையில் ஆகாயத்தில் கருடன் தன் அலகினால் நாகப்பாம்மை கடித்தவாறு போராடிக் கொண்டிருந்த பொழுது அப்பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உணவு இருந்த வட்டிலில் விழுந்தது. அது இத்தகைய கேட்டிற்குக் காரணமாக அமைந்தது.
ஒவ்வொரு மனிதனின் பாவபுண்ணியங்களை பதிவு செய்யும் சித்திரகுப்தன் குழப்பத்திற்கு ஆட்பட்டான். “மனிதர்களின் மரணத்திற்கு உண்மையாகக் காரணமானவர்கள் யார்? அரசனா? கருடனா? பாம்பா? யாருடைய கணக்கில் இந்தப் பாவத்தைப் பதிவு செய்வது?” என்று எமதர்மனைக் கேட்கின்றான். அதற்குள் தொலைவிலிருந்து வந்திருந்த வேத விற்பன்னர்கள் அரசன் ஏற்படுத்தியிருந்த அன்னதானத்திலே கலந்து கொள்வதற்குச் செல்லும் வழி எது என்று அரண்மனை வாயில் காப்போனிடம் கேட்டனர். “இந்த அரசன் கெட்டவன். பசு முகத்தைக் கொண்ட புலி போன்றவன். அன்னதானத்தைக் காரணமாக வைத்து வேத விற்பன்னர்களை விஷம் அளித்து கொன்று குவித்துள்ளான்” என்று கூறினான். இதனைக் கவனித்த எமதர்மன் ஆலோசித்து “அரசன் ஏற்படுத்திய அன்னதானத்தில் உலக நன்மை குறித்த எண்ணம் இருந்ததே தவிர எத்தகைய தன்னலமும் இருக்கவில்லை. கருடனுக்குப் பாம்பு உணவு. அதனுடைய தவறும் இல்லை. பாம்பு உயிரின் மீதுள்ள அச்சத்தால் வாயைத் திறந்து கொண்டு இருந்தது. அப்பொழுது ஒரு துளி விஷம் கீழே விழுந்தது. இதில் பாம்பின் தவறும் இல்லை. இந்நிகழ்வின் பின்னால் உள்ள உண்மையை உணராமல் தவறாகப் பிரசாரம் செய்து அரசனுக்குத் துரோகம் இழைத்த வாயில் காப்போனுக்கே பாவத்தின் பயனைப் பதிவு செய்” என்று சித்திரகுப்தனுக்கு ஆணையிடுகிறான். இக்கதையை ஆழமாகச் சிந்தித்து காணின் இது எப்பொழுதோ நடைபெற்ற புராணக்கதையன்று தவறு செய்யாதவரின் மீது தவற்றைச் சுமத்தி, கொடூரமாக ஆர்ப்பரித்து செருக்கி உலவும் தீயவர்களின் கதையுமாக உள்ளது.
ஸ்ரீ தரளபாளு ஜகத்குரு
டாக்டர் சிவமூர்த்தி சிவாசார்ய மஹாசுவாமிகள்
ஸிரிகெரெ
விஜய கர்நாடகா 5.10.2023
தமிழாக்கம்
கல்யாணி வெங்கட்ராமன்