பற்றற்ற ஞானியான மகாதேவி அக்கா இந்த வசனத்தில் தன் ஆன்மீக வாழ்வு சார்ந்த வேதனையை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்.
“மலடி பிரசவ வேதனையை அறிவளோ?
மாற்றாந்தாய் கொஞ்சுவதை அறிவளோ?
நோயின் துன்பத்தை நோயற்றவர் உணர்வரோ?
சன்னமல்லிகார்ச்சுனனின் துளைக்கும் வாள்
உடலைத் துளைத்து உட்சென்றுழி, நானடைந்த
இன்னலை உங்களால் அறியவியலுமோ அம்மா”
என வினவியுள்ளார். மலடியால் பிரசவ வேதனையை உணரவியலாது. தாய் தன் சொந்தக் குழந்தையைக் கொஞ்சுவதைப் போல மாற்றாந்தாயால் வேறு ஒருவரின் குழந்தையைக் கொஞ்ச இயலுவதில்லை. நோயுற்றோரின் துன்பத்தை நோய் அற்றோரால் உணரவியலாது. அதைப் போன்றே தான் ஆராதித்து வழிபடும் கடவுளான சன்னமல்லிகார்ச்சுனன் மீதுள்ள “சரண - சதி, இலிங்கபதி” என்னும் உணர்வு மயமான பக்தியானது தன்னுடைய உடலைக் கத்தியாகக் குத்தித் துளைத்து துயரத்தை அளித்துக் கொண்டிருப்பதை உங்களால் எவ்விதம் உணரவியலும்? என்று மஹாதேவி அக்கா இவ்வசனத்தில் தன் ஆன்மீக வாழ்வு சார்ந்த துயரமான உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்.
“எருமைக்கொரு எண்ணம், சக்கிலிக்கொரு எண்ணம்,
தருமிக்கு ஒரு எண்ணம், கருமிக்கு ஒரு எண்ணம்,
எனக்கு என் எண்ணம், அவனுக்கு அவன் காம எண்ணம்,
தள்ளிச்செல், தலைப்பை விடு மருளே,
எனக்கு இறைவன் சன்னமல்லிகார்ச்சுனன்
அருள்வாரோ, அருளாரோ எனும் எண்ணம்”
என்று தன்மீது காம எண்ணத்துடன் வந்த கௌசிகன் என்னும் அரசனை இகழ்ந்து, நிர்வாணமாக அரண்மனையிலிருந்து வெளியேறினார். இது ஆன்மீகம் சார்ந்த வாழியில் நடப்பவர்களின் உலகியல் சாராத வேதனையாகும்.
கடந்த வாரக் கட்டுரைகளில் விவரித்திருந்த குடும்ப வாழ்வு சார்ந்த, அன்பின் உன்னதமான முகம்தான் பக்தியாகும். ஆன்மீக மட்டத்திலே கடவுளின் மீதுள்ள பக்தியுடன் கூடிய எதையும் எதிர்நோக்காத அன்பே வேறு ஆகும், உலகியல் சார்ந்த வாழ்விலே தென்படும் மோகம் சார்ந்த அன்பே வேறு ஆகும். குடும்பத்தில் உள்ளோரிடம், குடும்ப வாழ்வில் உள்ள நட்பு சார்ந்த நம்பிக்கைகள் ஆழ்ந்த நட்புணர்வுடன் விளங்கக் கூடும் அல்லது உண்மையற்ற போலி அன்பாகவும் இருக்கக் கூடும். நண்பர்களின் இடையில் உள்ள நட்பு, நம்பிக்கைகள் ஆழ்ந்த நட்பு உணர்வுடன் திகழக்கூடும் அல்லது நடைமுறை சார்ந்த நட்பு உணர்வுடனும் விளங்கக் கூடும். வடமொழியில் ஒரு நீதி வாக்கியம் உள்ளது.
“ஷட்கர்ணோ பித்யதே மந்த்ர” அதாவது ஆறு செவிகளில் விழுந்த எந்த ஒரு விஷயமும் ரகசியமாக இருப்பதில்லை. இங்கு ஆறு செவிகள் எனில் 3 பேர் என்பது பொருளாகும். 3 பேர் உடன் அமர்ந்து உரையாடிய விஷயமானது வெளிப்படின், எஞ்சியுள்ள இருவரில் யாராவது ஒருவர் அதனை வெளிப்படுத்தி இருப்பார் என்று ஊகிக்கவியலும். ஆனால் அந்த இருவரில் யார் என்று உறுதி செய்து கொள்வதற்கு முற்பட்டு ஆராய்ந்தால் நம்பிக்கையானது கெட்டு விடும்.
இருவர் மட்டுமே சேர்ந்து பேசிய விஷயமானது வேறு ஒருவருக்குத் தெரிய வரும்போது, அந்த இருவரில் யார் வெளிப்படுத்தியிருக்கக் கூடும் எனும் உறுதியான முடிவிற்கு வரக்கூடும். இருவரும் சேர்ந்து பேசிய விஷயமே வேறு. வெளிப்பட்ட விஷயமே வேறு என்று அறியப்படின் இருவருக்கும் இடையில் நம்பிக்கையானது எஞ்சியிருப்பது இல்லை. ஆனால் தங்களுக்குள் நடந்த உரையாடலை ஏன் திரித்து வெளிப்படுத்தினார் என்பது சிக்கலான கேள்வியாகும். இதனை கசக்கிப் பிழிந்து அறிவதற்கு பதிலாகத் தான் நம்பியவன் நம்பிக்கைக்கு உகந்தவன் அன்று என உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். ஆனால் சில சமயங்களில் யாரோ மூன்றாம் மனிதர் மறைந்து நின்று கேட்டிருக்கக்கூடும். அவர் மறைந்து நின்று கேட்ட உரையாடலை நான்காவதாக வேறு ஒருவருக்கு கேட்டதை கேட்டவாறே கூறி இருப்பார் என்று நம்பவியலாது. இந்த நான்காம் மனிதர், மூன்றாம் மனிதர் கூறியதைக் கேட்டு, அத்துடன் தானே சில தேவையற்ற விஷயங்களைச் சேர்த்து பரவச் செய்து பகையை வளர்க்கிறார். அதனைக் கேட்ட வேறு சிலர் தாங்களாகவே தங்கள் திறமைக்கு ஏற்ப வெட்கமின்றி மசாலைகளைச் சேர்த்து தாளித்து, அதன் வாசனையானது ஏனையோரின் மூக்கைச் சென்று அடையும்படிச் செய்கின்றனர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஆடும் ஓர் ஆட்டம் உள்ளது. அதன் பெயர் “Telephone game” என்பதாகும். இந்த விளையாட்டில், ஆசிரியர்கள் வகுப்பிலுள்ள மாணவர்களை வட்ட வடிவமாக அமர்த்துவார்கள். முதலில் உள்ள மாணவனின் செவியில் இரகசியமாக ஒரு விஷயத்தைக் கூறுவார். அதனை அவன் மற்றவர்களுக்குக் கேட்காதவாறு அருகில் அமர்ந்துள்ள இரண்டாம் மாணவனின் செவியில் கூற வேண்டும். அவனும் அவன் அருகில் அமர்ந்துள்ள மூன்றாம் மாணவனின் செவியில் இரகசியமாகவே கூற வேண்டும். இவ்வாறு ஒருவருக்கொருவர், வாயினால் செவிக்கு, செவியிலிருந்து வாய்க்கு என்று பரவி இறுதியாக அமர்ந்துள்ள மாணவனின் செவியைச் சென்று அடையும் பொழுது அவன் எழுந்து நின்று தான் கேட்டதை அனைவரும் கேட்குமாறு உரக்கக்கூற வேண்டும்.
“கிரணிற்கு சளியும், இருமலும் ஏற்பட்டு நான்கைந்து நாட்களாக பள்ளிக்கு வரவில்லை” என்று ஆசிரியர் முதல் மாணவனிடம் கூறி இருந்தார். ஆனால் வகுப்பிலுள்ள நாற்பது ஐம்பது மாணவர்களின் செவி வாய் மூலமாகப் பரவி, இறுதியாக அமர்ந்திருந்த மாணவன் எழுந்து நின்று கூறியது “கிரணை மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்களாம். மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாம். அவன் பிழைத்து வருவது அரிது என்று மருத்துவர் கூறியுள்ளாராம்”.
இவ்வாறு உண்மையற்ற விஷயங்கள் கடலின் அலைகளைப் போல ஆர்ப்பரித்து கரையிலே மோதுகின்றன. உண்மை என்பது எவருக்கும் தென்படாமல் கடலின் அடியில் உள்ள முத்தைப் போல விளங்குகிறது.
“ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்”அதாவது தங்கக் குடத்திலே உண்மையின் முகம் அடங்கியுள்ளது என்னும் அனுபவப்பூர்வமான கூற்றானது பிருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ளது (5-15-1). உண்மையைக் கூறுவோர் சத்துவப் பரீட்சைக்கு ஆட்படுகின்றனர். வாழ்க்கையிலே துயரங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்வதற்கு அவர்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் என்றுமே எவருடனும் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
இரஷ்யாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான லியோடால்ஸ்டாய் அவர்கள் எழுதியுள்ள “God sees the truth, But waits” (கடவுள் உண்மையைக் காண்கிறார். ஆனால் காலம் தாழ்த்துகிறார்) என்னும் மனத்தைத் தொடும் ஒரு கதை உள்ளது. இது குறித்து முன்பே இதே பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
மஹாபாரதப் போர் நிறைவடைந்த பிறகு தர்மர் தன் உடன் பிறந்தோருடன் திருதராஷ்டிரனைக் காண்பதற்குச் சென்றார். திருதராஷ்டிரனுக்குத் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனின் மார்பு எலும்புகளை முறிக்க வேண்டும் என்னும் வெறுப்புடன் கூடிய பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணம் இருந்ததை ஸ்ரீ கிருஷ்ணர் முன்பே ஊகித்திருந்தார். அதனால்தான் பீமனின் உருவச்சிலையை குருடரான திருதராஷ்டிரனின் முன்பு ஸ்ரீ கிருஷ்ணர் தருவித்து வைத்திருந்தார். பலசாலியான திருதராஷ்டிரனின் கெட்ட வெறுப்புடன் கூடிய ஆலிங்கனமானது (தழுவுதல்) பீமனின் உருவச் சிலையை பொடிப்பொடியாக்கியது. ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் ஸீஸரிலும் இத்தகைய துரோகம் சார்ந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸீஸர் மிகவும் நம்பியிருந்த, அவருடைய வாழ்வுடன் பிணைந்து தொடர்பு கொண்டிருந்த நண்பனே புரூட்டஸ் ஆவான். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த பொழுதே தன்னை வாளால் வெட்டிய புரூட்டஸைக் குறித்து “You too Brutus!” என்று கூறியவாறு ஸீஸர் உயிரை விடுகிறார். மகாபாரதத்தில் வரும் திருதராஷ்டிரனின் பாத்திரம் மற்றும் ஜூலியஸ் ஸீஸரின் நாடகத்தில் வரும் புரூட்டஸின் பாத்திரமும் ஏறத்தாழ ஒன்று போல் உள்ளது. வஞ்சனை சூழ்ச்சி செய்து கொல்வதற்கு பாரத நாட்டு மொழிகளில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்” என்னும் சொல்லானது வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் “Brutal Murder” என்னும் சொல் நடைமுறையில் உள்ளது. அனைத்தையும் அன்புடன், அமர்ந்து கொண்டு பேசி சரி செய்து கொள்ள வியலும் என்னும் கூற்றானது பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் இதிகாசம் கற்பிக்கும் பாடமே வேறு ஆகும். அமைதியாக சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் அழைத்த அப்ஜல்கான் சிவாஜியை தழுவிக்கொள்ளும் சாக்கிலே முதுகிலே கத்தியால் குத்திக் கொல்வதற்கு முயற்சி செய்கிறான். கத்தியானது சிவாஜியின் கவசத்தைக் கிழிக்கிறது. சிவாஜியின் கையிலிருந்த புலி நகத்தால் அப்ஜல்கான் அழிகிறான்.
வாழ்க்கையிலே வரும் சவால்களை எதிர்கொள்வதே வீரனின் லட்சணமாகும். நீதி - நெறிமுறைகளை ஆதாரமாகக் கொண்டு இருப்பவர்களுக்கு எத்தகைய அச்சமும் இருப்பதில்லை. “அன்பற்ற கணவனுக்கு தயிரிலே கல்” என்பதைப் போல நல்லவற்றிலும் தவறுகளைத் தேடுவதே சில மனிதர்களின் கெட்ட இயல்பாக உள்ளது. அதற்காக தீயோருடன் தொடர்பு கொண்டு நிந்திப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இல்லாத செல்லாத தவறுகளைச் செய்து சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். இறுதியில் அவர்கள் ஏற்படுத்திய சிக்கல்களில் அவர்களே சிக்கிக் கொண்டு துன்பப் படுகின்றனர். இத்தகையவர்களைக் குறித்து ஆங்கில மொழியில் ஒரு அரிய கூற்று உள்ளது.
“The reason that facts don’t change most people’s opinions is because most people don’t use true facts to form their opinions. They use their opinions to form their own facts”
“உண்மைகள் பெரும்பாலான கருத்துக்களை மாற்றுவது இல்லை. ஏனெனனில் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதற்கு உண்மைகளை ஆதரிப்பது இல்லை. தங்களுடைய முந்தைய கருத்துக்களுக்குத் தக்கவாறு உண்மை சார்ந்தனவற்றை மாற்றி விடுகின்றனர்”.
ஸ்ரீதரளபாளு ஜதக்குரு
டாக்டர் சிவமூர்த்தி சிவாச்சாரியா மஹாஸ்வாமிகள்
ஸிரிகெரே
விஜய கர்நாடக
வெயில் - நிலவொளி 2.5.2024
தமிழாக்கம்
திருமதி. கல்யாணி வெங்கடராமன்